×

விஜயதசமி பூஜையில் நடந்த விநோதம்: 20 கிராம் நகையை விழுங்கிய பசுமாடு...அறுவைச் சிகிச்சை செய்து மீட்பு

சிவமோகா: விஜயதசமி நாளன்று பசுமாடுக்கு சாப்பிட கொடுத்த மாலையில் இருந்த 20 கிராம் நகையையும், அந்த பசு விழுங்கியதால் அறுவை சிகிச்சை செய்து நகை மீட்கப்பட்ட விநோதமான நிகழ்ச்சி கர்நாடகாவில் நடந்தது.  கர்நாடக  மாநிலம் சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள நந்திடாலே கிராமத்தைச் சேர்ந்த ரவிந்தர பட் என்பவர், கடந்த விஜயதசமி அன்று தனது வீட்டில் பூஜை செய்தார். அப்போது, வீட்டில் இருந்த சாமி சிலைக்கு, தனது 20 கிராம் தங்கச்  சங்கிலியை வைத்தும் வழிபட்டார். மறுநாள், அந்த மலர் மாலைகளை தனது பசுவுக்கு உணவாகக் கொடுத்தார். அதனை  பசு மாடும் மென்று தின்றுவிட்டது.

திடீரென யோசித்த ரவிந்தர பட், தனது 20 கிராம் தங்க செயினை பசுவுக்கு மாலையுடன் சேர்த்து உணவாக கொடுத்ததை நினைத்து அதிர்ச்சியடைந்தார். நீண்ட யோசனைக்குபின், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று  விஷயத்தைச் சொன்னார். மருத்துவர் தயானந்த், ‘பசுவைத் தொடர்ந்து கண்காணியுங்கள். அதன் சாணியோடு வெளிவந்துவிடும். அப்பவும், தங்க செயின் வெளியே வராமல், மாடு சுணக்கமாக இருப்பது தெரிந்தால், உடனடியாக அறுவை  சிகிச்சை செய்வோம்’ என்றார். இதையடுத்து மாட்டை வீட்டிலேயே கட்டிப்போட்டு, சாணி போடும்போது அதில் தங்கச்சங்கிலி இருக்கிறதா? என்று ரவிந்தர பட் தேடினார்.

ஆனால், செயின் கிடைக்கவில்லை. இதையடுத்து, மருத்துவர் தயானந்திடம் மீண்டும் சென்று கூறினார். அதன்பின்னர் பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த சங்கிலியை மீட்டனர். இதனால், ரவிந்தர பட் குடும்பத்தினர் நிம்மதி  பெருமூச்சுவிட்டனர். இதுகுறித்து, கால்நடை மருத்துவர் தயானந்த் கூறுகையில், ‘‘மாடுகளுக்கு வயிற்றில் நான்கு பிரிவு இருக்கும். மாடு முதலில் சாப்பிடும் உணவு, இரண்டு பிரிவுக்குச் செல்லும். ஓய்வு எடுக்கும்போது அதில் இருக்கும்  உணவை, அசைபோடும். அப்போது அது மற்றப்பிரிவுக்குச் செல்வது போல அதன் வயிறு அமைந்துள்ளது. அதன்படி சங்கிலி எங்கு இருக்கிறது என்பதை கணித்து ஆப்ரேஷன் செய்து அதை வெளியே எடுத்தோம். இப்போது பசு நலமாக  இருக்கிறது’’ என்றார்.


Tags : jewelery ,Vijayadasamy Pooja ,Basumadu ,recovery , Vijayadasamy Pooja: 20 grams of jewelery swallowed ...
× RELATED கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு..